காஞ்சிபுரம்
வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
|வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஜய் ஆனந்த் இவருடைய மகன் வினோத் கண்ணா (வயது 18). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மாத்தூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத் கண்ணா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்திராணி (வயது 65). பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று மதியம் மாமல்லபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அரசு பஸ்சில் ஏறுவதற்காக ஓடிவந்த இந்திராணி கால்தவறி பஸ்சின் முன்சக்கரத்தின் அருகே கீழே விழுந்தார். உடனடியாக பஸ்சை நிறுத்துவதற்குள் பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி இந்திராணி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த எல்.எண்டத்தூர் பாரதிநகர் புது காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). எழும்பூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் எழும்பூரில் இருந்து உத்திரமேரூருக்கு வந்தவர் உத்திரமேரூரில் வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
கம்மாளம்பூண்டி அருகே சாலை வளைவில் இருந்த கல்லில் மோதி நிலைதடுமாறி அருகில் இருந்த வயலில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உத்திரமேரூர். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.