< Back
மாநில செய்திகள்
நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேர் கைது - முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமா?
சென்னை
மாநில செய்திகள்

நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேர் கைது - முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமா?

தினத்தந்தி
|
13 Oct 2023 1:27 PM IST

நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் முக்கிய பிரமுகர்கள் யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் மர்ம கும்பல் ஒன்று போதை பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பம்மல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சத்யா என்ற பம்மல் சத்யா (வயது 26), நாகல்கேணியை சேர்ந்த மதன் என்ற குள்ள மதன்(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், தங்களின் பாதுகாப்பிற்காக கூட்டாளியான பழந்தண்டலத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(27) என்பவர் மூலம் சிட்லப்பாக்கத்தில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் 2 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருப்பதாகவும் கூறினர். அங்கு சென்ற போலீசார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்செல்வனும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 3 பேர் மீதும் கொலை, கொள்ளை என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் முக்கிய பிரமுகர்கள் யாரையாவது கொலை செய்ய திட்டம் தீட்டி, நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்