திருச்சி
அணில்களை கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது
|அணில்களை கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அணில்கள் கடத்தல்
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 29-ந் தேதி 2 மலேசியன் அணில்கள் திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்டன. விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது அந்த அணில்களை கடத்தி வந்த மலேசியாவை சேர்ந்த விஜயகுமாரியை என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்த 2 அணில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேல் விசாரணை நடத்த அவரை நேற்று முன்தினம் திருச்சி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட வன அலுவலர் கிரண் உத்தரவின்படியும், திருச்சி வனச்சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் வனவர்கள் பாலசுப்பிரமணியன், துளசிமலை, வனக்காப்பாளர்கள் ராஜ்குமார், சரவணன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
பெண் உள்பட 3 பேர் கைது
அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை உயிரினமான மலேசியன் அணில்கள் கடத்தலை தடுக்கவும், கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் தனிப்படையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். பிடிபட்ட விஜயகுமாரியிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அந்த அணில்களை பெற வந்த சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுல்தான்இப்ராகிம் (29), கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சேர்ந்த சாகுல்அமீது (28) ஆகியோரை 24 மணி நேரத்தில் வனத்துறையினர் பிடித்தனர்.
இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, வன உயிரினமான அணில்கள் அட்டவணை 1 பாலூட்டி வகை வரிசை எண் 150-ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த குற்றம் 7 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிக்கக்கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும்.
கைது
இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட அணில்கள் கோர்ட்டு உத்தரவுப்படி, சென்னை கிண்டி தேசிய பூங்காவில் இயங்கி வரும் வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.