காஞ்சிபுரம்
வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது
|வியாபாரியை மிரட்டிய பணம் பறிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் பொய்யா குளம் பகுதியை சேர்ந்தவர் தியாகு. கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது பெயரை பயன்படுத்தி செல்போனில் ஒருவர் காஞ்சீபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த நெல் மண்டி வியாபாரி தியாகுவை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.
மிரட்டல் விடுத்த நபர் அதே பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பிரபா தனது தம்பியென்று கூறி அவன் சொல்லவே தான் பொறுமையாக பேசி கொண்டிருப்பதாகவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததோடு உனது தொலைபேசி எண்ணுக்கு ஒரு வங்கி கணக்கு எண் வரும். அதில் பணத்தை போட்டே ஆக வேண்டுமென கட்டளையிட்டு, முடியாது என்று சொன்னால் உனது சங்கையே அறுத்து விடுவேன் என்பதோடு பொய்யாகுளம் தியாகு யார் என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு பார் இவ்வளவு ஏன் போலீசாரிடமே கூட கேட்டு பார் என கூறி, நீ பணம் போடவில்லை என்றால் என்ன ஆகுற பாக்கறியா என சவால் விடுத்து நீ பணம் போட்டே ஆக வேண்டுமென கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நெல் மண்டி வியாபாரி தியாகு, பணம் கேட்டு மிரட்டுவது குறித்து சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிவகாஞ்சி போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தீவிர தேடலுக்கு பின்னர் பிரபாவின் கோவை நண்பர்களான செந்தில் குமார், மோகன், அருண் ஆகியோரை கைது செய்தனர். பிரபாவை சிவகாஞ்சி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.