< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டையில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - கலெக்டர் அதிரடி நடவடிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டையில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - கலெக்டர் அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
23 Oct 2022 2:50 PM IST

ஊத்துக்கோட்டையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராபின் (வயது 24). இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ராபினின் நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அருகே உள்ள பொந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் இரவு நடைபெற்றது. ராபின் தன் நண்பர் கமல் என்பவருடன் விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பின்னர் இரவு சுமார் 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

இந்த நிலையில், ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் ராபின் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரிவாளால் தாக்கிய கும்பல் தப்பி ஓடிவிட்டது. இது குறித்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 23), காரனோடையை சேர்ந்த சரவணன் (26), பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த ராகுல் (26) ஆகிய 3 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், வேளாங்கண்ணி அருகே உள்ள மரக்காணத்தில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழி தீர்க்க ராபின் கொலை செய்யப்பட்டது. விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கார்த்திக், சரவணன், ராகுல் ஆகியோர் மீது பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீசுக்கு சிபாரிசு செய்தார். இதைத்தொடர்ந்து, கலெக்டரின் உத்தரவின் பேரில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் செய்திகள்