செங்கல்பட்டு
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
|மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7-வது அவென்யுவில் வசித்து வந்தவர் அருண்குமார் (வயது 24). தனியார் கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 17-ந்தேதி அதிகாலை வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை காணாது அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் சோழிங்கநல்லூர் கே.கே.சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நம்பர் பிளேட் இல்லாமல் ஒரே மோட்டார் சைக்கிளிள் வந்த 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (24), யாழின்ராஜ் (24), செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி சென்னை மணலி புதுநகர் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
பல்வேறு வழக்குகள்
தொடர் விசாரணையில் இளவரசன் மீது திருச்சி, துறையூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட பல வழக்குகளில் பலமுறை சிறை சென்று வந்ததுள்ளார் என்பதும் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
அசோக் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி, மிரட்டல், கத்தியால் வெட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பலவழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை சிறை சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாழின்ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு பெண் கடத்தல் வழக்கு, ஆள் கடத்தல் வழக்குகளில் சிறை சென்றதும், 12-ம் வகுப்பு முடித்து விட்டு டாக்டருக்கு படிக்க பிலிப்பைன்ஸ் சென்று வந்ததும், கடைசியாக சுகாதார ஆய்வாளராக தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பணி உத்தரவுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது. 3 பேரும் சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் அசோக் சென்னையில் திருடும் மோட்டார் சைக்கிள்களை திருச்சிக்கு எடுத்து சென்று இளவரசன் மற்றும் யாழின்ராஜிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளார்.
இடையில் துறையூர் போலீசாரின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து இளவரசன், யாழின் ராஜ் இருவரும் அங்குள்ள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். யாழின்ராஜின் மனைவிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதை சரி செய்ய சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் கம்பெனியில் வேலை பார்த்தால் போதுமான பணம் கிடைக்காது என்பதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.