< Back
மாநில செய்திகள்
நீலாங்கரை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

நீலாங்கரை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
7 Nov 2022 5:51 PM IST

நீலாங்கரை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள அக்கரை சி-கிளிப் 5-வது நிழற்சாலை பகுதியில் கடற்கரை ஓரத்தில் வசிப்பவர் டாக்டர் அபர்ஜிந்தால் (வயது 39). கடந்த செப்டம்பர் மாதம் இவர், சொந்த ஊரான உத்தரபிரதேசம் சென்றுவிட்டார்.

அப்போது மர்மநபர்கள் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.4.5 லட்சம், சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக திருச்சி உறையூரை சேர்ந்த சங்கர் (32), முசிறியை சேர்ந்த மணிகண்டன் (26), வீரமுத்து (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கர் மீது சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல் கிண்டி மடுவாங்கரை ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டார். இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கத்தை சேர்ந்த 18 வயது சிறுவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்