திண்டுக்கல்
செல்போன் கடையில் திருடிய 3 பேர் கைது
|வேடசந்தூரில், செல்போன் கடையில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன்கள் திருட்டு
வேடசந்தூர் கொங்கு நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவர், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ந்தேதி இவர், கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறக்க வந்த சதாசிவம் அதிர்ச்சி அடைந்தார்.
அதாவது, கடையின் கதவில் இருந்த கம்பியை நெம்பி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் சதாசிவம் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
இதற்கிடையே கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கடந்த 16-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் கடையின் பின்பகுதியில் டி-சர்ட், டவுசர் அணிந்திருந்த 3 வாலிபர்கள் வந்தனர்.
பின்னர் 2 பேர் அங்கு நின்று கொண்டனர். ஒருவர் மட்டும் கடையின் பின்பகுதியில் உள்ள இரும்பு கதவின் கம்பியை நெம்பி உள்ளே புகுந்தார். பின்னர் செல்போன்களை திருடி, ஒரு பையில் எடுத்து கொண்டு அதே வழியாக மீண்டும் வெளியே வந்தார்.
பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அங்கிருந்து சென்று விட்டனர். இந்த காட்சி, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. அதனை துருப்புச்சீட்டாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வேடசந்தூர் அய்யனார்நகரை சேர்ந்த குமார் (வயது 19), சூர்யா (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.