திருவண்ணாமலை
பக்தர்களிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது
|திருவண்ணாமலையில் பக்தர்களிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலையில் பக்தர்களிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் திருட்டு
திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்தநிலையில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் செல்போன், பணப்பை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகர், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
12 செல்போன்கள்
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் ரோந்து சென்றபோது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 12 செல்போன்கள் இருந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர்கள் பக்தர்களிடம் செல்போன், பணப்பை உள்ளிட்டவற்றை திருடியது தெரியவந்தது.
3 பேர் கைது
மேலும் விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் வீரப்பன் நாயக்கன்பாளையத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 26), பெத்தான்பட்டியை சேர்ந்த பிரதாப் (20), அரூர் தாலுகா அம்பேத்கர் நகரை சேர்ந்த அன்பழகன் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.