காஞ்சிபுரம்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
|உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர் அடுத்த பழைய சீவரம் பாலாற்று மணல் திட்டு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக சாலவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாலவாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பி ஓட முயன்றனர் அவர்களை விரட்டி பிடித்த போலீசார் அங்கு சோதனை செய்ததில் அங்கு 1¼ கிலோ அளவிலான கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா, எடை போடும் எந்திரம், கத்தி போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த கன்னியப்பன் (வயது 23), விழுப்புரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (19), சிறுமயிலூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (20) என்பது தெரிய வந்தது மேலும் அந்த பகுதியில் அவர்கள் கஞ்சாவை பாக்கெட் செய்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.