வேலூர்
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
|நாட்டறம்பள்ளி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டறம்பள்ளி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பகுதியில் ஏழுமலையான் வட்டம் மலையடிவாரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களுடன் நின்றுகொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் 3 பேரையும் சோதனை செய்தனர். அதில் 2 பேரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கலைஞர் கருணாநிதி பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் வசந்தகுமார் (வயது 23), அக்ராகரம் பகுதியை சேர்ந்த அன்பு மகன் சரத்குமார் (23), குடியானகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயசந்திரன் மகன் அன்பரசன் (22) என்பதும், வசந்தகுமார் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் தனது பாக்கெட்டில் தலா 100 கிராம் கஞ்சா வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதனையெடுத்து வசந்தகுமார் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் கஞ்சா மறைத்து வைத்திருந்ததாகவும், அன்பரசன் உடந்தையாக இருந்ததாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.