திருவள்ளூர்
வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை 3 பேர் கைது
|பூந்தமல்லி அருகே பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளவேடு,
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவர் தனது நண்பர்கள் கோவர்தன் (25), சச்சின் (30), நிஷாத் (27) ஆகியோருடன் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு, புதுச்சத்திரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். ராஜேசுக்கும், கோவர்த்தனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் ராஜேஷை தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கு காரணமான கோவர்தன், சச்சின், நிஷாத் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.