நாமக்கல்
வெங்காய வியாபாரிக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது
|பரமத்திவேலூரில் வெங்காய வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்
சேலம் மாவட்டம், பூவாலூர் அருகே உள்ள பருத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 33). இவர் சரக்கு ஆட்டோவில் வெங்காயம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள சினிமா தியேட்டர் எதிரே ஆட்டோவில் வைத்து வெங்காயம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் வெங்காயத்தை கையில் அள்ளிக்கொண்டு வெங்காயத்தை வாங்காமலும், வியாபாரம் செய்ய விடாமலும் கார்த்திக்கிடம் வாக்கு வாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கார்த்திக்கை தரக்குறைவாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததுடன் சரக்கு ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இது குறித்து கார்த்திக் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் வேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிவு செய்து வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் (28), பொய்யேரியை சேர்ந்த சிட்டிபாபு (28), நன்செய்இடையாறை சேர்ந்த கோகுல் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.