கிருஷ்ணகிரி
வடமாநில தொழிலாளி கொலையில் 3 பேர் கைது
|ஓசூரில் செல்போன் வாங்கியதற்கு பார்ட்டி கொடுத்தபோது ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை செய்த அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்
தொழிலாளி
பீகார் மாநிலம் பாட்னா அருகே ஹன்சாபூர் பகுதியை சேர்ந்தவர் பாபலு ராம். இவரது மகன் விகாஸ் குமார் (வயது21). இவர், சின்ன எலசகிரி பகுதியில் தங்கி ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே வீட்டில், பாட்னா அருகே நியூ ஜெகன்பூரை சேர்ந்த பர்ஜஸ்குமார் என்பவரது மகன் சிவம்குமார் (19) என்பவரும் விகாஸ் குமாருடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், விகாஸ்குமார், தங்கி இருந்த வீட்டில், உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அவரது உறவினர் சுதேந்திரகுமார் என்பவர், ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று, விகாஸ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது செல்போன் வாங்கியதற்கு பார்ட்டி கொடுத்தபோது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விகாஸ்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் தங்கி இருந்த சிவம்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மது விருந்து
அப்போது விகாஸ்குமார் புதிதாக செல்போன் வாங்கியதை கொண்டாடும் வகையில், கடந்த திங்கட்கிழமை இரவு நண்பர்களுக்கு, வீட்டில் மது விருந்து வழங்கி உள்ளார். இதில் சிவம்குமார் மற்றும் நண்பர்களான மேற்குவங்காளம் உத்தர் தினஜ்புர் பகுதியை சேர்ந்த தன்ம ராய் (22), சுஷாந்தா தேப்சிங்கா (21) ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். போதை தலைக்கேறியதும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து விகாஸ்குமாரை சரமாரியாக குத்தி உள்ளனர். போதையில் இருந்த விகாஸ்குமார் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து, சிவம்குமார் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.