நாமக்கல்
கடத்தப்பட்ட லாரி மீட்பு; 3 பேர் கைது
|குமாரபாளையம் அருகே லாரியை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாாி அதிபர்
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் ஒசுவன் காட்டு பகுதியை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர் மகன் தினேஷ்குமார். லாரி அதிபர். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரி ஒன்றை தீபாவளி மறுநாள் தனது வீட்டு அருகில் நிறுத்தி வைத்து இருந்தார். இந்தநிலையில் திடீரென லாரியை காணவில்லை. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் லாரி டிரைவர் முனுசாமியிடம் விசாரித்தார். அப்போதுதான் லாரி திருடு போனது தெரிய வந்தது.
இதையடுத்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் குற்றப்பிரிவு சப-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், இளமுருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார்கள் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
3 பேர் கைது
இந்தநிலையில் நேற்று குமாரபாளையத்தில் எடப்பாடி ரோடு காவிரி புதுபாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வேனும் அதனைத்தொடர்ந்து டிப்பர் லாரி ஒன்றும் வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த லாரி கடத்தப்பட்ட லாரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து சத்தியமங்கலம் கல்கொத்து கண்ணன் என்கிற கவியரசு (வயது 24), திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி கண்ணன் (38), கோவை மாவட்டம் திம்பம் பாளையம் சுருளி என்கிற ஜேசுராஜ் (43) ஆகிய 3 பேர் லாரி கடத்தியது தெரியவந்தது.
பின்னர் டிப்பர் லாரியையும், வேனையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். இவர்கள் 3 பேரும் ஏற்கனவே ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.