< Back
மாநில செய்திகள்
3 மாநில போலீசாரிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையன் ஈரோட்டில் கைது; 150 பவுன் நகை மீட்பு
ஈரோடு
மாநில செய்திகள்

3 மாநில போலீசாரிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையன் ஈரோட்டில் கைது; 150 பவுன் நகை மீட்பு

தினத்தந்தி
|
2 Oct 2023 1:45 AM IST

3 மாநில போலீசாரிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையனை ஈரோட்டில் நேற்று போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 150 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

3 மாநில போலீசாரிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையனை ஈரோட்டில் நேற்று போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 150 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

ஆடிட்டர்

ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. ஓய்வுபெற்ற பேராசிரியை. இவர்களுடைய மகள் ஜனனி. இவர் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி துரைசாமி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மனைவி சுப்புலட்சுமி மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் கணவன், மனைவி இருவரும் மதியம் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

151 பவுன் நகை கொள்ளை

இதைத்தொடர்ந்து பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் 151 பவுன் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் துரைசாமி இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழிகாட்டுதலின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் கொள்ளையனை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

தீவிர தேடுதல் வேட்டை

கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதைப்போல் பழைய குற்றவாளிகள் 3 ஆயிரம் பேரின் புகைப்படங்களையும், பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்து வெளியே வந்த பழைய குற்றவாளிகள் 1,000 பேரின் திருட்டு செயல்முறைகளும் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஆடிட்டர் வீட்டில் நகையை கொள்ளை அடித்தது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொள்ளையன் என்பது தெரியவந்தது. இதனால் அவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

வாகன தணிக்கை

இந்த நிலையில் நேற்று அதிகாலை கொள்ளையன் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு-சத்தி ரோட்டில் உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்து கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

கொள்ளையன் கைது

அப்போது அவர், ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே உள்ள கொண்டகு அணை கிராமத்தை சேர்ந்த மானுகொண்ட அனில் குமார் (வயது 32) என்பதும், இவர் தான் ஆடிட்டர் துரைசாமி வீட்டில் 151 பவுன் நகையை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அனில்குமாரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 150 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் மானுகொண்ட அனில் குமார் மீது 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. 3 மாநில போலீசாருக்கு சவால் விட்டு வந்த நிலையில் நேற்று ஈரோடு போலீசாரிடம் அனில்குமார் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறும்போது, 'ஆடிட்டர் வீட்டில் கொள்ளை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் கண்காணிப்பு கேமரா மிக முக்கிய பங்கு வைத்தது. எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

மேலும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்போது, அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்லவேண்டும். உங்கள் தெருக்களில் சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த திருட்டு வழக்கில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்க-வைர நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்