< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் -அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் -அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
17 Dec 2022 12:21 AM IST

ரூ.4,194 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

சென்னை,

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்து உள்ளது. இதன் மூலம் இந்தத் திட்டங்களுக்காக ரூ.4,194.66 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், திண்டுக்கல்

அதன்படி, காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ.4,187.84 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிகள், ராமநாதபுரம், திருப்புலானி, பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், மண்டபம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 2,306 ஊரகக் குடியிருப்புகள் மற்றும்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, நெய்க்காரப்பட்டி, கீரனூர் பேரூராட்சிகள் ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, ரெட்டியார் சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,422 ஊரகக் குடியிருப்புகளில் 3,19,192 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் 30.40 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டம்;

திருவள்ளூர் மாவட்டம்

அடுத்ததாக, புதுஏரி கால்வாயில் ராமன்ஜிகண்டிகை கிராமத்திற்கு அருகில், 5 ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாகக் கொண்டு ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியம் அம்மம்பாக்கம் மற்றும் கூனிப்பாளையம் ஊராட்சிகளைச் சார்ந்த அம்மம்பாக்கம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 717 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் 4,900 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்;

மேலும், மாமண்டூர் ஏரியில் 4 ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாகக் கொண்டு ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் பூண்டி ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியைச் சார்ந்த வேலகாபுரம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 522 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் 4,050 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவையாகும்.

கிடைக்கும் நீர் அளவு

இத்திட்டங்கள் நிறைவடையும்போது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டர் வீதமும், பேரூராட்சிகளுக்கு 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்