தூத்துக்குடி
போலீஸ் நிலையத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
|தூத்துக்குடியில் போலீஸ் நிலையத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதனை சுற்றிலும் முள்வேலியும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மர்ம நபர்கள் போலீஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த முள்வேலியை சேதப்படுத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 மோட்டார் சைக்கிள்களை நைசாக திருடி சென்று உள்ளனர்.
இதுகுறித்து அறிந்த தாளமுத்துநகர் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கட்டிட தொழிலாளிகளான தாளமுத்துநகர் சுனாமி காலனியை சேர்ந்த முருகேசன் மகன் ஆறுமுகம் (வயது 19), தமிழரசன் மகன் வெங்கடேஷ் (19), சிலுவைப்பட்டியை சேர்ந்த கணேசன் (20), அம்பேத்கார்நகரை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 4 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று ஆறுமுகத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.