ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
|ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. கொலை சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் என மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். நாட்டு வெடிகுண்டுகள் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்த வழக்கில், இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.