செங்கல்பட்டு
சித்த மருத்துவரை கடத்தி ரூ.3¾ லட்சம் பறித்த மேலும் 3 பேர் கைது
|சித்த மருத்துவரை பயன்படுத்தி ரூ.3¾ லட்சம் பறித்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் வினோத் சங்கர் (வயது 46). அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இவருக்கு புதுச்சேரி சூரமங்கலத்தை சேர்ந்த வினோதன் (25) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார்.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி வினோத் சங்கரை தொடர்பு கொண்டு சக்தி வாய்ந்த கலசம் இருப்பதாக வினோதன் தெரிவித்தார். அதை வாங்க வினோத் சங்கர் 4 பேருடன் புதுவைக்கு காரில் வந்தார்.
அவர்களை வினோதன் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து வேல்ராம்பேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடத்தி சென்றார். அங்கு அவர்களை மிரட்டி நகை, ரூ.3 லட்சத்து 77 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு விடுவித்தனர். காரையும் பறித்துக் கொண்டனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் வினோத் சங்கர் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோதன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த அறிவழகன் (25) வேல்ராம்பட்டு விமல் (26) கொம்பாக்கம் சந்துரு (22) ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் கொம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று அறிவழகன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.