< Back
மாநில செய்திகள்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி  17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்
சேலம்
மாநில செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி 17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்

தினத்தந்தி
|
19 Sep 2022 8:22 PM GMT

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்,

தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரேம்சந்திரன் (வயது 74). இவர் நேற்று மதியம் மனைவி சிவானந்த ஜோதி (63), மகன் குருசந்திரமூர்த்தி (30) ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் நுழைவு வாயில் பகுதிக்கு வந்தவுடன் பிரேம்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பிறகு அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

இதுகுறித்து பிரேம்சந்திரன் கூறும் போது, 'எங்களுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அதேபகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தர மறுக்கிறார். எனவே, அவரிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தரக்கோரி ஏற்கனவே பலமுறை கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வந்தேன்' என்றார்.

இதைத்தொடர்ந்து பிரேம்சந்திரன் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆட்டோவில் போலீசார் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் ஏற மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்