அலங்காநல்லூர் அருகே குடும்பத்துடன் கிணற்றில் குதித்த விவசாயி - மனைவி, 2 பிள்ளைகள் பலி
|அலங்காநல்லூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(39). விவசாயி. இவரது மனைவி சுரேகா (36). இவர்களுக்கு திருமணமாகி யோகிதா(16) ஒரு மகளும், மோகனன் (11) ஒரு மகனும் உள்ளனர்.
மகள் மதுரையில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். மகன் பாலமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார். முருகன் தனது குடும்பத்துடன் குலமங்கலம் அருகே உள்ள ஒரு கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது குடும்பத்துடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் தங்களை மீட்டு அடக்கம் செய்து விடுங்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த உறவினர் உடனடியாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பார்த்தபோது குடும்பத்தினர் அனைவரும் கிணற்றில் மிதந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அலங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் விரைந்து பிரேதத்தை கைப்பற்றினர். அதில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இறந்து விட, கழுத்து அறுக்கப்பட்டு கணவர் முருகன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் சம்பவ இடம் விரைந்து வந்த சமயநல்லூர் சரக டி.எஸ்.பி பாலசுந்தரம் மற்றும் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.