< Back
மாநில செய்திகள்
3 சாராய வியாபாரிகள் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
கடலூர்
மாநில செய்திகள்

3 சாராய வியாபாரிகள் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
16 July 2023 12:15 AM IST

கடலூர் மாவட்டத்தில் 3 சாராய வியாபாரிகள் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.

விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் வள்ளிமதுரம் சுடுகாடு அருகில் சம்பவத்தன்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த பனையாந்தூரை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுரேஷ் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கபிரிவு மற்றும் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 சாராய வழக்குகள் உள்ளன.

இதேபோல் கடலூர் கம்மியம்பேட்டை சுடுகாடு அருகில் சாராயம் பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி மாநிலம் குருவிநத்தத்தை சேர்ந்த கலைமணி (34) என்பவரை கடலூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 135 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இவர் மீது கடலூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் 6 சாராய வழக்குகள் உள்ளன.

தடுப்புக்காவல் சட்டம்

காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று வில்வகுளம் புதுப்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த விஜி (39) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சுரேஷ், கலைமணி, விஜி ஆகியோர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், சாராய வியாபாரிகள் 3 பேரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ், கலைமணி, விஜி ஆகியோரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்