< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரைக்க திட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரைக்க திட்டம்

தினத்தந்தி
|
14 Sept 2022 11:58 PM IST

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்க்கரை ஆலை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் அனைத்து விவசாய சங்க தலைவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆலை அதிகாரிகள் 2022-23-ம் ஆண்டுக்கு 12 ஆயிரம் ஏக்கர் கரும்பு உள்ளதாகவும், சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அரவை சீசனுக்கு சாதாரண தொழிலாளர்களாக 193 பேரை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. சர்க்கரை இருப்பு 2 லட்சத்து 10 ஆயிரத்து 778 குவிண்டால், மொலாசஸ் இருப்பு 7 ஆயிரத்து 268 டன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எத்தனால் உற்பத்தி

கடந்த ஆண்டு ஆலையில் ரூ.104 கோடிக்கு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இணை மின் நிலையம் மூலம் மின் உற்பத்தி 2 லட்சத்து 77 ஆயிரத்து 830 யூனிட் உற்பத்தி செய்துள்ளது. எத்தனால் உற்பத்தி ஆலை அமைக்க ஆய்வுக்குழு வருகை தந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2021-22-ம் கரும்பு அரவை பருவத்திற்கான தொகை முழுவதையும் வழங்கிய தமிழக அரசுக்கும், ஆலையை சிறப்பாக இயக்கிய அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 2022-23-ம் ஆண்டுக்கான அரவையை வருகிற டிசம்பர் மாதம் 5-ந்தேதி அன்று தொடங்கப்படும் என அரசின் முடிவு வரவேற்கப்பட்டது. கரும்பை தாக்கி வரும் "பொக்கோபோயிங்" என்ற நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டத்தை அதிகாரிகள் வகுத்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டிராக்டர் வாடகை உயர்த்த வேண்டும்

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். டீசல் விலை ஏற்றத்தால் டிராக்டர் வாடகையை உயர்த்தி கொடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டு கூலியாக ஏக்கருக்கு விவசாயிகளுக்கு முன்பணமாக ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும். பங்குதாரர்களுக்கு ஏக்கருக்கு 5 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி தர வேண்டும். 2021-22-ம் ஆண்டு ஆலை பேரவை கூட்டத்தில் விவசாயிகளால் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆலை அதிகாரிகள், அனைத்து விவசாய சங்க தலைவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்