< Back
மாநில செய்திகள்
சென்னை கடற்கரையில் 3 கி.மீ. தூரத்திற்கு கரை ஒதுங்கிய குப்பைகள்
மாநில செய்திகள்

சென்னை கடற்கரையில் 3 கி.மீ. தூரத்திற்கு கரை ஒதுங்கிய குப்பைகள்

தினத்தந்தி
|
8 Nov 2022 9:13 AM GMT

இந்த ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கரை ஒதுங்கி உள்ளன.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் இயற்கை அழகை ரசிக்க சென்றவர்களும், நடைபயிற்சி சென்றவர்களும் கடற்கரை முழுவதும் குப்பை கழிவுகள் பெருமளவில் குவிந்து அலங்கோலமாக கிடந்ததை பார்த்து கவலையடைந்தனர்.

வழக்கமாக இந்த மாதிரி பருவமழை காலங்களில் கடல் அலைகள் நிறைய கழிவுகளை வெளியேற்றுவது வழக்கம் தான். அது ஆற்று தண்ணீரில் இழுத்து வரப்பட்ட இலை தழைகள் மற்றும் குப்பை கழிவுகளாக இருக்கும். ஆனால் இந்த முறை குவிந்து கிடந்த குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஐஸ்கிரீம் கப், மது குடிக்கும் பிளாஸ்டிக் கப், தெர்மாகோல்கள், சாப்பாடு பார்சல் கட்டும் பிளாஸ்டிக் கண்டெய்னர்கள், அதிக அளவில் கிடந்தது.

கடலிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்து கொண்டிருக்கின்றன. குப்பை பொறுக்குபவர்களும் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய கிடைத்ததாக தெரிவித்தனர். இதுபற்றி கடலோர மாசு கட்டுப்பாடு நிபுணர்கள் கூறியதாவது:-

மழைக்காலத்தில் தண்ணீரில் கடலுக்குள் சென்றடையும் குப்பை கழிவுகள் கரை ஒதுங்குவது வழக்கமானதுதான். ஆனால் இந்த ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கரை ஒதுங்கி உள்ளன. இதற்கு காரணம் பல மாதங்களாக அடையாறு ஆற்றில் மக்களால் கொட்டப்பட்ட கழிவுகள் ஆற்றில் தேங்கி கிடந்துள்ளது. இப்போது வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் முகத்துவாரத்தின் வழியாக ஆற்றுத் தண்ணீர் கடலில் கலக்கிறது. ஆற்று தண்ணீரில் அடித்து வரப்படும் கழிவுகள் தான் இப்படி கரை ஒதுங்குகிறது என்றனர்.

இந்த குப்பை கழிவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மிகப்பெரிய அளவில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர். இரவு நேரத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதால் அந்த நேரத்தில் குப்பைகளை அகற்றுவது கடினமானது. எனவே அதிகாலை முதல் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

குப்பைகளை அகற்றி மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி சென்றனர். ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான காலி மது பாட்டில்களும் குவிந்து கிடந்தன. குப்பை பொறுக்குபவர்கள் கோணிகளுடன் மது பாட்டில்களை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்