கடலூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி
|கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகினர்.
ஸ்ரீமுஷ்ணம்,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் மாஞ்சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 40) என்பவர் வீட்டில் செப்டிக் டேங்க் சென்டரிங் பிரிக்கும் பணி நடைபெற்றது. அப்போது விஷ வாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, கொத்தனார் பாலசந்தர் (32), சக்திவேல்(25) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
முன்னதாக இதில் வீட்டின் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கட்டப்பட்டது. இதில் செப்டிக் டேங்க் மேற்பகுதியில் கான்கிரீட் போடுவதற்காக, செப்டிக் டேங்க் குழிக்குள் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சாரத்தை அகற்றுவதற்காக மாலை 6 மணி அளவில் கிருஷ்ணமூர்த்தி, பாலச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக செப்டிக் டேங்க் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய துளை வழியாக உள்ளே இறங்கினர்.
இந்த நிலையில் செப்டிக் டேங்க் குழிக்குள் இறங்கிய மூன்று பேரும் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே 3 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் செப்டிக் டேங்க் குழிக்குள் கிடந்த 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது 3 பேரும் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.