< Back
மாநில செய்திகள்
பிரபல ஓட்டலில் கெட்டுப்போன 3 கிலோ கோழிக்கறி பறிமுதல்
திருச்சி
மாநில செய்திகள்

பிரபல ஓட்டலில் கெட்டுப்போன 3 கிலோ கோழிக்கறி பறிமுதல்

தினத்தந்தி
|
19 Oct 2023 2:10 AM IST

பிரபல ஓட்டலில் கெட்டுப்போன 3 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.

கெட்டுப்போன உணவு

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பிரபல தனியார் ஓட்டலில் நேற்று மதியம் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் சிக்கன் 65 பிரியாணி ஆர்டர் செய்து பெற்றார். ஆனால் அந்த உணவு கெட்டுப்போய் இருந்தது. இதையடுத்து அவர் அந்த ஓட்டலுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு முறையான பதில் அளிக்காததால், நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது சூடான உணவை பார்சல் செய்ததால் கெட்டுவிட்டது என்று கூறினர். இதனை ஏற்றுக்கொள்ளாத அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ஓட்டலில் கெட்டுப்போன 3 கிலோ 400 கிராம் சிக்கனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ஓட்டலுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

*திருச்சி நாகமங்கலத்தை சேர்ந்த மணியின் மனைவி சாந்தி(வயது 49). இவர் நேற்று முன்தினம் காலை தனது மகன் கோபாலகிருஷ்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

*திருச்சி சுப்பிரமணியபுரம் இளங்கோ தெருவை சேர்ந்த சுரேஷ்கண்ணா(47), திருச்சியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் மயங்கி விழுந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

4 பேர் காயம்

*திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்(36) தனது ஆட்டோவில் காஜாமலையை சேர்ந்த மும்தாஜ்(55), அவருடைய உறவினர் குழந்தைகள் ஹனிபா (13), அபினயா (3) ஆகியோருடன் மன்னார்புரம் சந்திப்பில் வந்தபோது, அந்த வழியாக வந்த சரக்குவாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில் ஜெயபிரகாஷ் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

*திருச்சி பாலக்கரை கிருஷ்ணன்கோவில் தெருவில் கஞ்சா விற்றதாக ஆலம் தெருவை சேர்ந்த விமல்ராஜை(51) பாலக்கரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்திமார்க்கெட், பாலக்கரை, உறையூர் ஆகிய பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக சரவணன் (47), சண்முகசுந்தரம் (46), பாலா (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீரங்கம் மாணிக்கம்பிள்ளை தெருவில் பணம் வைத்து சூதாடியதாக வடிவேல் (49), ஜெயக்குமார் (70), மோகன்ராஜ் (67), சுரேஷ் (47), அய்யப்பன் (60) ஆகிய 5 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் திருச்சி மாநகர பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் 8 பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 18 நாட்களில் மட்டும் மொத்தம் 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

*திருச்சி மேல கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி(71), ஒரு ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரிடம் செல்போனை பறித்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த இளையராஜாவின் மகன் அருண் (19), 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காதல் மனைவியை தாக்கிய கணவர் கைது

*திருச்சி விமானநிலையம் அருகே உள்ள காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கபூர்(29). இவருடைய மனைவி மைதிலி (27). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தந்தை வீட்டில் இருந்த மைதிலிைய ராஜ்கபூர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்கபூரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்