< Back
மாநில செய்திகள்
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

தினத்தந்தி
|
11 July 2022 9:11 PM IST

தாய்லாந்து, மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை அசோக் நகரை சேர்ந்த சாகுல் அமீது(வயது 30), திருச்சியை சேர்ந்த ரசீத் (28), மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை மண்ணடியை சேர்ந்த அருண் பாண்டியன் (30), துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பழனிசாமி (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

மேலும் துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி அணிந்து இருந்த காலணியில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 80 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 4 பேரையும் கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்