திருவள்ளூர்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதலில் 3 பேர் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்
|திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக கூறி பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்
திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையப்பன் (வயது 38). கட்டிட தொழிலாளியான இவர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (52), எல்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சோமையா (55) ஆகியோருடன் வீரகநல்லூர் பகுதியில் நேற்று கட்டிட வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மாலையில் சடையப்பன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணி, சோமையா ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் கே.ஜி.கண்டிகை நோக்கி வந்து கொண்டிருந்தார். செருக்கனூர் கூட்டு சாலை அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிர் திசையில் பள்ளிப்பட்டில் இருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் சடையப்பன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
3 பேர் படுகாயம்
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சடையப்பன், சுப்பிரமணி ஆகிய இருவருக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டது. சோமையாவிற்கு கால் முறிந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் செருக்கனூர் கூட்டு சாலையில் வேகத்தடை அமைக்காததால் தான அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுவதாக புகார் கூறி நெடுஞ்சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
தகவல் அறிந்து விரைந்து சென்ற திருத்தணி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.