தேனி
மரம் சாய்ந்து 3 வீடுகள் சேதம்
|தேனியில் பெய்த பலத்த மழையால் மரம் சாய்ந்து 3 வீடுகள் சேதமடைந்தது.
தேனியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. தேனி பழைய டி.வி.எஸ். சாலையில், ரெயில்வே தண்டவாளம் அருகில் இருந்த பெரிய வேப்பமரம் ஒன்று பலத்த மழைக்கு நள்ளிரவு 2.30 மணியளவில் வேரோடு சாய்ந்தது. அப்போது அருகில் இருந்த விஜய், சித்ரா, கதிர்வேல் குமரன் ஆகிய 3 பேரின் வீடுகள் மீது பலத்த சத்தத்துடன் மரம் சாய்ந்தது. அப்போது விஜய் வீட்டில் அவரும், அவருடைய குடும்பத்தினரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். மற்ற வீடுகளிலும் மக்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிர்ஷ்டவசமாக வீட்டின் மேற்கூரை பகுதிகளில் மரம் சாய்ந்து நின்றதால் வீட்டுக்குள் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் நின்ற மரம் என்பதால் நேற்று பகல் 11 மணி வரை அதனை அகற்ற அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. 3 வீடுகளும் சேதமடைந்த நிலையில், இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் அங்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், பொதுமக்களே மரம் வெட்டும் தொழிலாளர்களை அழைத்து வந்து தங்களது செலவில் மரத்தை வெட்டி அகற்றினர். இதுபோன்று மழைக்காலங்களில் சாயும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து, உடனடியாக அவற்றை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.