விருதுநகர்
இருக்கன்குடியில் 3 மணி நேரம் சாலை மறியல்
|இருக்கன்குடியில் 3 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.
சாத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபாரில் இருக்கன்குடியை சேர்ந்த காந்திராஜன் (வயது35) என்பவர் பணியாற்றி வந்தார். அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட காந்திராஜன் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை 5 மணிக்கு இருக்கன்குடி - நென்மேனி சாலையில் திரண்டு காந்திராஜனை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண தொகை ஆகியவை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் தரப்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகளின் சமரசத்தை ஏற்ற கிராம மக்கள் 3 மணி நேரத்துக்கு பின்னர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.