திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே குட்கா கடத்திய 3 பேர் கைது; கார் பறிமுதல்
|திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் குட்கா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் திருவள்ளூர் பஜார் வீதி, பஸ் நிலையம், ஆயில் மில் பகுதி, சி.வி நாயுடு சாலை, ஜே.என்.சாலை போன்ற பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினார்கள். இருப்பினும் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். அந்த காரை சோதனை செய்தபோது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குட்கா கடத்திய கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 23), கிஷோர் (38) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ராம் ஆற்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் குட்கா கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.