தேனி
மாணவ-மாணவிகள் போராட்டம்; அரசு பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
|மாணவ-மாணவிகள் போராட்டம் எதிரொலியாக ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேரை பணியிடைநீக்கம் செய்து தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
மாணவ-மாணவிகள் போராட்டம் எதிரொலியாக ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேரை பணியிடைநீக்கம் செய்து தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
மாணவ, மாணவிகள் போராட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கடந்த 13-ந்தேதி பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கூறும்போது, பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் அருள்பிரகாசம் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமான முறையில் தகாத வார்த்தைகள் பேசியதாகவும், கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி இந்திராணி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மீது மாணவ-மாணவிகள் குற்றச்சாட்டுகளை கூறினர். மேலும் விசாரணையில், அதே பள்ளியில் பணியாற்றும் மேலும் 2 ஆசிரியர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பணியிடைநீக்கம்
அதன்பேரில் உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம், வணிகவியல் ஆசிரியர் செல்வக்குமார், தாவரவியல் ஆசிரியர் வெற்றிவேல் ஆகிய 3 பேரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி இந்திராணி நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஒழுங்கீனமாக செயல்பட்டது, மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்த காரணமாக இருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.