< Back
மாநில செய்திகள்
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் 3 அரசு பஸ்களை ஜப்தி
கரூர்
மாநில செய்திகள்

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் 3 அரசு பஸ்களை ஜப்தி

தினத்தந்தி
|
1 March 2023 6:37 PM GMT

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்காததால் 3 அரசு பஸ்களை ஜப்தி செய்து குளித்தலை நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

தாய்-மகன் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி விஜயராணி (வயது 32). இவர் தனது 2 வயதான வினோத் என்ற மகனுடன் அரசு பஸ்சில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்தில் தாய்- மகன் 2 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு இறந்தனர். இதையடுத்து இழப்பீடு தொகை கோரி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தார் குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை செய்த அப்போதிருந்த நீதிபதி அகிலா ஷாலினி விஜயராணிக்கு இழப்பீடு தொகையாக ரூ.9 லட்சத்து 59 ஆயிரமும், வினோத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் வழங்க வேண்டும் என 2017-ம் ஆண்டு தீர்ப்பு கூறினார்.

இதன் பிறகும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்காத காரணத்தால் மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை கிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த தற்போதைய சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி வட்டியுடன் சேர்த்து விஜயராணிக்கு இழப்பீடு தொகையாக ரூ.15 லட்சத்து 73 ஆயிரத்து 77, வினோத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.6 லட்சத்து 37 ஆயிரத்து 362-யை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் இல்லையெனில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு கூறினார்.

மற்றொரு வழக்கு

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் சத்தியாகு (வயது 40) என்பவர் அரசு பஸ் மோதி கடந்த 2011-ம் ஆண்டு இறந்தார். இதையடுத்து இழப்பீடு தொகைக்கோரி அவரது குடும்பத்தார் குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த அப்போது இருந்த நீதிபதி ஸ்ரீதர், ஜேம்ஸ்சத்யாகு குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் வழங்க வேண்டும் என 2020- ஆண்டு தீர்ப்பு கூறினார். அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்காத காரணத்தால் மீண்டும் நிறைவேற்றுமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த தற்போதைய சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முககனி வட்டியுடன் சேர்த்து ஜேம்ஸ்சத்தியாகு குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்து 23 ஆயிரத்து 577-ஐ அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் இல்லையெனில் அரசு பஸ் ஜப்தி செய்யப்படும் என கடந்த மாதம் தீர்ப்பு கூறினார்.

3 அரசு பஸ்கள் ஜப்தி

இந்த 3 வழக்குகள் தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடுத் தொகை வழங்காத காரணத்தால் நேற்று குளித்தலை வழியாக சென்ற 3 அரசு பஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் குளித்தலை பஸ் நிலையத்தில் ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட பஸ்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஒரே நாளில் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்