< Back
மாநில செய்திகள்
3 அரசு பஸ்கள் ஒரே நாளில் ஜப்தி
திருச்சி
மாநில செய்திகள்

3 அரசு பஸ்கள் ஒரே நாளில் 'ஜப்தி'

தினத்தந்தி
|
20 Oct 2023 1:30 AM IST

3 அரசு பஸ்கள் ஒரே நாளில் ‘ஜப்தி’ செய்யப்பட்டன.

விபத்தில் பலி

திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் அருகில் கடந்த 15.12.16 அன்று அரசு பஸ் மோதியதில் திருச்சியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் பலியானார். இதற்கு இழப்பீடு கேட்டு அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் வட்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சத்து 23 ஆயிரத்து 590 வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு திருச்சி மாவட்ட மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதேபோல் வையம்பட்டி பாலவிடுதி மெயின்ரோட்டில் கடந்த 31.8.18 அன்று அரசு பஸ் மோதியதில் மணப்பாறை தாலுகா பொன்னணியாறு தெற்கு முகவனூரை சேர்ந்த ஆரோக்கியசாமி பலியானார். இதற்கு இழப்பீடு கேட்டு அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் வட்டியுடன் சேர்த்து ரூ.19 லட்சத்து 33 ஆயிரத்து 740 வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு திருச்சி மாவட்ட மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

படுகாயம்

மேலும் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கடந்த 31.8.18 அன்று அரசு பஸ் மோதியதில் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ஜானகி நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்தார். இதற்காக நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தான் பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு சந்தோஷ்குமார் தொடர்ந்த வழக்கில் அவருக்கு வட்டியுடன் ரூ.35 லட்சத்து 30 ஆயிரத்து 453 இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் 3 வழக்குகளிலும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை.

3 அரசு பஸ்கள் ஜப்தி

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனுவை தனித்தனியாக தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றம் இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய 3 வழக்குகளிலும் உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 3 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் 'ஜப்தி' செய்தனர்.

மேலும் செய்திகள்