போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.73.84 கோடியில் 3 மேம்பாலங்கள் - ககன்தீப் சிங் பேடி
|சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 மேம்பாலங்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தங்குதடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும் மாநகரின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ரூ.73.84 கோடி மதிப்பில் புதியதாக 3 மேம்பாலம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அதனடிப்படையில், தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள , 41-வது வார்டு, மணலி சாலையில் ரெயில்வே சந்திக்கடவு குறுக்கே, வடிவமைப்பு, பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானம் முறையில் மேம்பாலம் அமைக்கும் பணி.
அண்ணாநகர் மண்டலம் 98-வது வார்டு, ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2-வது தெரு மற்றும் கீழ்பாக்கம் தோட்டம் தெரு இணைத்து அமைந்துள்ள பாலத்தை இடித்துவிட்டு புதியதாக பாலம் அமைக்கும் பணி மற்றும் ஆலந்தூர் மண்டலம், 161-வது வார்டு ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ஜீவன் நகர் 2-வது தெரு மற்றும் மேடவாக்கம் பிரதான சாலையை இணைத்து பாலம் அமைக்கும் பணிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடிவுற்றால் மாநகரின் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என அரசு முதன்மைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.