மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு
|ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் சுரேஷ், ரவி மற்றும் மஞ்சுநாத். இவர்களின் பெற்றோர்கள் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். குழந்தைகள் கர்நாடகாவில் அவர்களது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். விடுமுறையில் சிறுவர்கள் தங்களது பெற்றோரை பார்க்க வந்துள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆபத்தை அறியாமல் அவர்கள் அருகே உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் அந்த சிறுவர்கள் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடகாவை சேர்ந்த இந்த 3 சிறுவர்களில் அண்ணன், தம்பியான சுரேஷும் ரவியும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள். மேலும் இவர்களின் நண்பன் மஞ்சுநாத் வாய் பேச முடியாதவர் ஆவார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.