< Back
மாநில செய்திகள்
வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு

தினத்தந்தி
|
22 May 2022 7:28 PM IST

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நீர்வாழி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் அரக்கோணத்தில் உள்ள தனது மகள் பவித்ரா (வயது 22) வீட்டுக்கு கடந்த சில நட்களுக்கு முன்பு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகளிடம் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

திருத்தணியை அடுத்த பொன்பாடி அம்பேத்கர் நகர் அருகே ரவி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த ஆந்திர பதிவெண் கொண்ட கார் அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரவி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

திருத்தணி அடுத்த மாம்பாக்கசத்திரம் காலனியை சேர்ந்தவர் சங்கர் (35). விவசாயி. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வேலை நிமித்தமாக திருத்தணி பை-பாஸ் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு மீண்டும் மாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தை சேர்ந்த சுக்கிரன் (26), கஜேந்திரன் (40) ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செருக்கனூர் கிராமத்தில் இருந்து திருத்தணி நோக்கி சென்றனர். சித்தூர் சாலையில் வரும் போது சங்கர் வந்த மோட்டார் சைக்கிளும், சுக்கிரன் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். காயம் அடைந்த சுக்கிரன், கஜேந்திரன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கொண்டமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (28). இவருக்கு மனைவியும், ஒருமகளும் உள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் அஜித் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை கொண்டமாநல்லூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் கும்மிடிப்பூண்டி நோக்கி சென்றார். அவருடன் சேலத்தை சேர்ந்த நண்பர் மனோஜ்குமார் (23) என்பவரும் உடன் சென்றார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் ஆந்திராவில் இருந்து வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற அஜித் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடன் சென்ற நண்பர் மனோஜ்குமார் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்