தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
|தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான வருகிற 16-ந்தேதி, ஜனவரி 25-ந்தேதி, ஜனவரி 26-ந்தேதி (குடியரசு தினம்) 'டாஸ்மாக்' கடைகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
காஞ்சீபுரம்,
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான வருகிற 16-ந்தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 25-ந்தேதி (வள்ளலார் நினைவு தினம்), ஜனவரி 26-ந்தேதி (குடியரசு தினம்) 'டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுதோறும் விடுமுறை விடப்படுவது வழக்கம். அரசின் இந்த அறிவிப்பை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவார்கள்.
அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய தயாரிப்பு மதுபான கடைகள் (டாஸ்மாக்), அயல்நாட்டு மதுபான கடைகள் (எலைட்) மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) ஆகியவை 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), 25-ந்தேதி (வியாழக்கிழமை), 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 தினங்களில் நாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
எனவே இந்த தேதிகளில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 'டாஸ்மாக்', 'எலைட்' மதுபான கடைகள் மற்றும் அனைத்து வகை பார்கள் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.