மாமல்லபுரத்தில் 3 நாட்கள் சி20 சர்வதேச மாநாடு
|மாமல்லபுரத்தில் 3 நாட்கள் நடக்கும் சி20 சர்வதேச மாநாட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
சி20 மாநாடு
முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாடு அடுத்த மாதம் (ஜூன்) 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்னோட்டமாக மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் 'சர்வதேச சி20 மாநாடு' ெதாடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை வெளியிட்டு, அனைவருக்கும் வழங்கினார்.
மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
மிகப்பெரிய பேரழிவு
இந்தியா, ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை வகிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பொருளாதாரம், அரசியல் ஆகியவை குறித்து ஜி20 மாநாட்டில் கூடி சந்தித்து பேசி வருகிறோம். இன்று உலகம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய பேரழிவை எதிர்நோக்குகிறோம்.
இதனை உடனடியாக தடுக்காவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் உலக வரைபடத்தில் இருந்து பல தீவுகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், இல்லை என்றால் நாம் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும். இதை சமாளிக்க பல நாடுகள் முயன்று வருகிறது. நாம் இதில் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
தடுப்பூசி இலவசம்
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட போது, பல நாடுகள் முயன்று தடுப்பூசிகள் உருவாக்கப்பட்ட போது, சில நாடுகள் அதை பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாக மாற்றியதை நாம் கண்டோம். ஆனால் நமது விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கியபோது, வசுதெய்வ குடும்பகம் உலகின் 159 நாடுகளுக்கு அதை இலவசமாக வழங்கியது. அணுசக்தி கார்பன் இல்லாதது, ஆனால் ஆபத்து இல்லாதது அல்ல. இந்த நேரத்தில் இந்தியா தட்பவெப்பநிலையில் முன்னேற முடிவுசெய்து, பசுமை ஆற்றலுக்குச் சென்றது. நமது எரிசக்தித் தேவைகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை பசுமை ஆற்றலில் இருந்து பெறப்படுகின்றன, அங்கு புதைபடிவங்கள் இல்லை. அணுக்கள் இல்லை. ஆற்றலை உற்பத்தி செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தின் கட்டத்தில் அனைவரும் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
19 நாட்டு பிரதிநிதிகள்
இந்த மாநாட்டில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சின்மயா மிஷன் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுவாமி மித்ராநந்தா ஆச்சார்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதையொட்டி தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகம் முழுவதும் மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.