< Back
மாநில செய்திகள்
கறம்பக்குடியில் 3-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கறம்பக்குடியில் 3-ந்தேதி கடையடைப்பு போராட்டம்

தினத்தந்தி
|
28 Sept 2023 12:23 AM IST

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி வருகிற 3-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

காத்திருப்பு போராட்டம்

கறம்பக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது. விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக தினமும் 10-க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பது இல்லை.

இதனால் உயிர் இழப்புகள் தொடர்ந்து வருகின்றன. எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி கறம்பக்குடியில் கடந்த 13 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

3-ந் தேதி கடையடைப்பு

இந்நிலையில் கறம்பக்குடி வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க தலைவர் சாந்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரியும், கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தியும், கடந்த 13 நாட்களாக கறம்பக்குடியில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் வர்த்தகம் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்