< Back
மாநில செய்திகள்
3 மாதங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான நகை-பணம் மீட்பு
சென்னை
மாநில செய்திகள்

3 மாதங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான நகை-பணம் மீட்பு

தினத்தந்தி
|
15 Feb 2023 12:32 PM IST

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. அவற்றை உரியவர்களிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் துவக்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்து 2 மாதங்கள் ஆனநிலையில், ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட 25 போலீஸ் நிலைய எல்லைகளில் உள்ள வீடுகள், கடைகளில் நடைபெற்று வந்த வழிப்பறி, கொள்ளை, திருட்டு, சம்பவங்களை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போலீசார் பெருமளவு பறிமுதல் செய்தனர்.

அதன்படி கடந்த 3 மாதங்களில் ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 174.25 பவுன் தங்க நகைகள், 586 கிராம் வெள்ளி, 331 செல்போன்கள், 17 மோட்டார் சைக்கிள்கள், 127 கேமராக்கள், 11 டி.வி.க்கள் மற்றும் ரூ.10 லட்சம் பணம், ஆகியவைகளை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து திருமுல்லைவாயல் அருகே உள்ள காவலர் திருமண மண்டபத்தில் மீட்கப்பட்ட பொருட்கள் நேற்று பார்வைக்கு வைக்கப்பட்டது. அவற்றை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பார்வையிட்டார். அதன்பின்னர் உரியவர்களிடம் அவைகளை ஒப்படைத்தார். மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரத்து 160 என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை போலீஸ் கமிஷனர்கள் பெருமாள், உமையாள், பாஸ்கரன், மணிவண்ணன், ஜெயலட்சுமி, மற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்