அரியலூர்
செந்துறை ஒன்றியத்தில் ரூ.3¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
|செந்துறை ஒன்றியத்தில் ரூ.3¾ கோடியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.3 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்படி இலங்கைச்சேரி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1¼ கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கைச்சேரி கிராம சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தும், கீழமாளிகை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கீழமாளிகை அங்கன்வாடி கட்டிடத்தையும் திறந்து வைத்தார். மேலும் அங்கன்வாடிக்கு வருகைதந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.
சாலை அமைக்கும் பணி
மத்துமடக்கி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் வீராக்கன் முதல் பொன்பரப்பி வரை சாலை அமைக்கும் பணியினையும், அதனைத்தொடர்ந்து கழுமங்கலம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.6 லட்சம் மதிப்பீட்டில் கழுமங்கலம் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார். மேலும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான பொருட்களைக் கொண்டு முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.
இந்தநிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இலக்குவன், அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், செந்துறை தாசில்தார் பாக்கியம் விக்டோரியா மற்றும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.