விழுப்புரம்
ரூ.3¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணி
|செஞ்சி அருகே ரூ.3¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
செஞ்சி
செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ஊராட்சி ரெட்டிபாளையத்தில் இருந்து தென்பாளையம் செல்லும் வழியில் வராக நதியின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மழைக்காலத்தில் இந்த பாலம் மூழ்கி விடுவதால் அங்கு மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.3 கோடி 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் சேகர் வரவேற்றார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய மேம்பாலம் கட்டும் பணியை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.5 கோடி 60 லட்சம் மதிப்பில் மேல் அருங்குணம் சாலை அமைக்கும் பணியை அவர் ஆய்வு செய்தார்.
இ்ந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன், மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், செஞ்சி ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் கேமல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணகுமார், ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.