செங்கல்பட்டு
மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள் மீட்பு
|மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சக மாணவர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மாமல்லபுரம் கடற்ரைக்கு சென்றனர். கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் அவர்களில் 4 பேர் கடலில் இறங்கி குளித்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலை 3 மாணவர்களையும் கடலுக்குள் இழுத்து சென்றது. 100 மீட்டர் தூரத்திற்கு கடலில் இழுத்து செல்லப்பட்ட அவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். இதை பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர்.
அங்கு குதிரை சவாரியில் ஈடுபடும் தேசிங்கு (32) என்பவர் உடனே கடலில் நீந்தி சென்று தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை பார்த்தஅவரது நண்பர்களான கடற்கரை பகுதி புகைப்பட கலைஞர்கள் தினேஷ், மோகன் ஆகியோர் கடலில் நீந்தி சென்று தேசிங்குக்கு உதவியாக 3 மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினர். பின்னர் கடற்கரைக்கு வந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலர் சண்முகம், மூத்த தீயணைப்பு வீரர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு துறையினர் கடலில் சிக்கி உயிருக்கு போராடிய மணவர்களை காப்பாற்றிய தேசிங்கு மற்றும் அவரது நண்பர்களின் மனித நேயத்தை பாராட்டினர். மீட்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த வசந்த் (22), செங்கல்பட்டு மாவட்டம், வையாவூரை சேர்ந்த அஜய் (24), சாலவாக்கத்தை சேர்ந்த ராகுல் (26) ஆகியோரை தீயணைப்பு துறையினரும், போலீசாரும் எச்சரித்து அனுப்பினர்.