ஈரோடு
ஆடு- இருசக்கர வாகனங்கள் திருடியதாக கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
|ஆடு- இருசக்கர வாகனங்கள் திருடியதாக கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
கோபி, சிறுவலூர், நம்பியூர், கடத்தூர் ஆகிய போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது. எனவே இதில் தொடர்புடையவர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோபி அருகே உள்ள கல்ராமணி பகுதியில் கோபி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் சிறுவலூரை சேர்ந்த 4-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான ரஞ்சித்குமார் (21), கோபியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவரான கவின் (19), கரட்டடிபாளையத்தை சேர்ந்த 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான ஹரிபிரசாத் (20) ஆகியோர் என்பதும், அவர்கள் கோபி பகுதியில் ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களை திருடியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 8 ஆடுகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.