கோவை அருகே தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
|கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை கண்டதும் மாணவர்கள் அதில் உற்சாகமாக குளியல் போட்டனர்.
கோவை,
கோவை அருகே உள்ள பச்சாபாளையம், திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் பிரவீன் (வயது 17). அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் கவின்(16). வேலுச்சாமியின் மகன் தக்ஷன் (17), ராமசாமி மகன் சஞ்சய்(17). இவர்கள் 4 பேரும் தீத்திப்பாளையம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தனர். நண்பர்களான 4 பேரும் விடுமுறை நாட்களில் அந்த பகுதியில் ஒன்றாக விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தற்போது பொதுத்தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பிரவீன், கவின், தக்ஷன், சஞ்சய் ஆகியோர் வெளியே சென்று விளையாடி வந்தனர்.
நேற்று மாலை காருண்யா நகர் அருகே பெருமாள் கோவில்பதியில் உள்ள முண்டந்துறை ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்றனர். 40 அடி ஆழம் உள்ள அந்த தடுப்பணையில் தற்போது 15 அடி தண்ணீர் உள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை கண்டதும் மாணவர்கள் அதில் உற்சாகமாக குளியல் போட்டனர். அப்போது மாணவர்கள் பிரவீன், கவின், தக்ஷன், சஞ்சய் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இதில் சஞ்சய் மட்டும் தத்தளித்தப்படி கரைக்கு வந்தார். மற்ற 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். நண்பர்கள் தண்ணீரில் மூழ்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த சஞ்சய் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினார். உடனடியாக இதுகுறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பதறியடித்து அங்கு ஓடி வந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து கருண்யா நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தடுப்பணையில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு பிரவீன், கவின், தக்ஷன் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் இறந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.