காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி - சமூகநல பாதுகாப்புத்துறை குழு நேரில் ஆய்வு
|தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தது தொடர்பாக சமூகநல பாதுகாப்புத்துறை குழு நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பூர்,
அவிநாசி அருகே தனியார் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தது தொடர்பாக சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால், இந்த காப்பகத்திலிருந்த 14 குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அதில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுதொடர்பாக விசாரணை நடத்த சமூக நல பாதுகாப்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட சமூகநல பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழுவினர், விவேகானந்தா சேவாலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.