ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்: உடலை வாங்க மறுத்து போராட்டம் - திருச்சியில் பரபரப்பு
|கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பாடசாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி,
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஹரிபிரசாத் என்ற சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பாடசாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமான் பட்டர் குருகுலம் வேத பாடசாலையில் படித்து வந்த, மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத், விஷ்ணு பிரசாத், ஆந்திராவைச் சேர்ந்த சூரிய அபிராம் ஆகிய 3 சிறுவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மூன்று பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் விஷ்ணு பிரசாத், சூர்ய அபிராம் ஆகிய இரண்டு சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட ஹரிபிரசாத் உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்து ஊருக்கு சென்றுவிட்டனர். சம்பந்தப்பட்ட பாடசாலை, நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர்.