உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு - 3 பேர் கைது
|உடுமலை இந்து முன்னணி பிரமுகரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை இந்து முன்னணி பிரமுகரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
உடுமலை ஏரிப்பாளையம் விஜய் நகரைச் சேர்ந்த அஸ்வின் பிரசாத் என்பவரின் மனைவி வளர்மதி, அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரது மனைவி கவிதாவுக்கு சுய உதவிக்குழுவில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை கவிதா திருப்பி செலுத்தாததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் வளர்மதி புகாரளித்துள்ளார். இதனையடுத்து 3 தவணைகளாக பணத்தைத் திருப்பித் தருவதாக கவிதா மற்றும் ரஞ்சித் குமார் உறுதியளித்துள்ளனர். ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் வீட்டைக் காலி செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து அஸ்வின் பிரசாத் தனது நண்பரான இந்து முன்னணி உடுமலை வடக்கு நகர செயலாளராக இருந்த ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த குமரவேலை அழைத்துக் கொண்டு ரஞ்சித் குமார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் கவிதா சொன்னதன் பேரில் ரஞ்சித் குமார், மாரி, ஜான்சன், சிவா, ஆத்தியப்பன், செந்தில் மற்றும் சிலர் சேர்ந்து குமரவேலை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அதனைத் தடுக்க முயன்ற அஸ்வின் குமாரையும் தாக்கியதால் அவர் தப்பி ஓடியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த சிவா என்கிற சிவானந்தம் (வயது 30), தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த ஆத்தியப்பன் (45), கோவை மாவட்டம் ஆதிபாளையத்தைச் சேர்ந்த செந்தில் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய ரஞ்சித்குமார், கவிதா உட்பட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.